

டீ கடைக்காரரின் மகள் மலையாள மொழி பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி அபியா ஆண்டனி மலையாள மொழிப் பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய 2 பாடங்களில் 200 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 176-ம், பொருளாதாரத்தில் 194-ம், வணிக கணிதத்தில் 191 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இவரது தந்தை ஆண்டனி டீக்கடை நடத்தி வருகிறார்.
கூடுதல் பயிற்சி
இதுகுறித்து, அபியா ஆண்டனி கூறும்போது, “நான் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்கவில்லை. தினமும் 3 மணி நேரம் மட்டுமே படிப்பேன். பள்ளியில் நடத்தும் பாடத்தைக் கூர்ந்து கவனித்து வீட்டுக்கு வந்ததும் கவனமாக படிப்பேன். பள்ளியில் ஆசிரியர்கள் அளித்த கூடுதல் பயிற்சியே எனக்கு போதுமானதாக இருந்தது. இதனால் டியூஷனுக்குச் செல்லவில்லை.
மேற்கொண்டு பட்டயக் கணக்காளர் படிப்பில் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) சேர்ந்து படிக்க வேண்டும் என்பது எனது ஆசை’’ என்றார்.