Published : 14 May 2022 10:36 AM
Last Updated : 14 May 2022 10:36 AM

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் குடும்பத்தினரின் தலையீட்டை தடுக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

சென்னை: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!" என்று பெண்ணின் உயர்வைப் போற்றிப் பாடினார் கவிமணி தேசிக விநாயகம். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழங்கினார் மகாகவி பாரதியார். "நாட்டுக்கு ஏற்றம் தருவது பெண்களின் முன்னேற்றமே" என்றார் போறிஞர் அண்ணா. இவற்றிற்கெல்லாம் முற்றிலும் முரணாக தமிழ்நாட்டில் பெண்ணடிமைத்தனம் தலைவிரித்து ஆடுகிறது.

ஏற்கெனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 34வது வார்டு பெண் கவுன்சிலர் ஷர்மிளா காந்தி அவர்களின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கவுன்சிலர் அலுவவகத்திற்கு வந்து மக்களை மிரட்டுவது போன்ற வீடியோவும், தாம்பரம் மாநகராட்சி 31வது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர் சித்ரா தேவி என்பவரின் மைத்துனர் தனது ஆதரவாளர்களுடன் சென்று உணவுக் கடை உரிமையாளரை மிரட்டியது போன்ற புகாரும் வெளிவந்த நிலையில் இதனைக் கண்டித்து நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.

இருப்பினும் திமுக பெண் கவுன்சிலர்கள், பெண் நகரமன்றத் தலைவர்கள், பெண் மாநகராட்சி மேயர்களுக்கான பணிகளை அவர்களது கணவர்கள் தான் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தற்போது மதுரை மாநகராட்சியில், மேயர் இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதாகவும், மதுரை மாநகராட்சி மன்றத்தில் முன் வரிசையில் இடமளிக்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு,

பின் வெளிநடப்பு செய்ததாகவும், நேற்று முன் தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்திலும் முன்வரிசையில் இடமளிக்காததால் இரு தரப்பிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும், இதனைத் தொடர்ந்து மேயரிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் அளிக்க சென்றதாகவும், அவர்களுடன் செய்தியாளர்களும் சென்றதாகவும், அப்போது மேயரின் கணவர் மற்றும் அவரது ஆட்கள் செய்தியாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் கதவை பூட்டியதாகவும்,

இதில் இரு செய்தியாளர்கள் காயமடைந்ததாகவும், இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதாகவும், மேயரின் கணவர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆதிக்கம்தான் மாநகராட்சியில் ஓங்கி இருக்கிறது என்றும், அவர்கள் தான் மேயர் அலுவலகத்தையே ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், மக்கள் பிரச்சனை உட்பட அலுவலகம் சார்ந்த தகவல்களை இவர்களை மீறி மேயரிடம் எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், மாநகராட்சி, அலுவலர்கள் கூட மேயர் அலுவலகம் பக்கம் செல்வதில்லை என்றும், திமுக கவுன்சிலர்களே இது குறித்து அதிருப்தியில் உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்குப் பதிலாக அவர்களது கணவன்மார்களும், உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல். ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக் கொண்டு, மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது "படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழியைத்தான் நினைவு படுத்துகிறது. ஒருவேளை இதுதான் "திராவிட மாடல்” போலும்!

பெண்ணுரிமையை போற்றிப் பாடுகின்ற தமிழகத்தில் பெண்ணடிமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் வீட்டை மட்டும் ஆண்டு வந்த பெண்கள் இன்று நாட்டையும் ஆளத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களை பொம்மையாக வைத்து, ஆண்கள் செயல்படுவது என்பது மகளிருக்கு எதிரான, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயல். இது, "பெண் முதலில் தந்தைக்கு அடிமை, பின் கணவனுக்கு அடிமை, பின் மகனுக்கு அடிமை" என்னும் பழமைவாதத்தை நோக்கி செல்வது போல் உள்ளது. இதனைத் திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பது என்பது, இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை பொதுமக்களிடையே
எழுப்பியுள்ளது.

'மகளிர் உரிமை' குறித்து அடிக்கடி பேசும் முதல்வர், மகளிருக்கு உரிமைத் தொகை என வாக்குறுதி அளித்த முதல்வர், உண்மையிலேயே மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை இருக்குமானால், இதில் உடனடியாக தலையிட்டு, மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x