Published : 14 May 2022 08:09 AM
Last Updated : 14 May 2022 08:09 AM
சென்னை: நைட்டியுடன் கோயிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலரை தடுத்த அர்ச்சகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயில் அர்ச்சகரான கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
சேலம் மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் நைட்டி அணிந்து, நான் அர்ச்சகராக பணியாற்றும் கோயிலுக்குள் வந்தார். இதுபோல உடை அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறி அவரை தடுத்தேன். இதனால் அவரது ஆதரவாளர்கள் என்னை தாக்க முயன்றனர்.
இந்த நிலையில் ஆகம விதிகளுக்கு முரணாக கோயிலை 12 மணிவரை திறந்து வைத்ததாகவும், பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியும் என்னை பணி இடைநீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட திமுக பெண் கவுன்சிலர் ஆகியோர் ஜூன் 1-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT