

சேலம்: ‘சூழ்நிலைக்கேற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டி உள்ளது. மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்’ என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது. இதில் ஆத்தூரில் மே 18-ல் நடைபெறும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், முதல்வர் கலந்துகொள்கிறார். இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: மோசமான நிதி நிலைமையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்வர் நடத்துகிறார். அதிமுக ஆட்சியில் வைத்துவிட்டு சென்ற டெண்டர் தொகைக்குதான் கடன் வாங்க வேண்டி உள்ளது. திமுக மேற்கொள்ளும் சின்ன சின்ன விஷயங்களையும் எதிர்த்தால்தான் அரசியல் வாழ்வு என பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார். விரைவில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: அதிமுக ஆட்சியில்தான் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தது. நிதி ஆதாரத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. சூழ்நிலைக்கேற்ப சிலவற்றின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார்.