Published : 17 May 2016 09:34 AM
Last Updated : 17 May 2016 09:34 AM

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது எப்படி?

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூக்கும் குறிஞ்சி மலரின் சுகந்த மணத்துக்காக மாணவர்கள் காத்திருக்கும் தருணம் இது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் என்னும் அந்த இனிய மணம் உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். உங்கள் உழைப்பின் மணம் அது. முடிவுகள் எப்படியிருந்தாலும் கவலையில்லை. வழிகள் ஏராளமாக இருக்கின்றன. வாருங்கள், விரிவாக பார்ப்போம்.

மதிப்பெண்களில் சுருக்கிவிடாதீர்கள் வாழ்க்கையை!

* ஒரு விஷயத்தை அடிப்படையாக மனதில் நிறுத்துங்கள். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் வெற்றியாளர்கள் அல்ல; வெற்றியாளர்கள் எல்லோரும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்ல. பிளஸ் 2 தேர்வில் அநேக பேர் சதம் அடித்திருக்கிறார்கள். நீங்கள் அவர்கள் அளவுக்கு மதிப்பெண் வாங்கவில்லையா? இதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவர்களைவிட உங்களுக்கு பெரியதாக, பிடித்தமான ஒன்று காத்திருக்கிறது. அதற்கான முடிவுகள்தான் இது. ஆறுதல் வார்த்தைகள் அல்ல இவை. பத்தாம் வகுப்பு தேறாத சச்சின் தொடங்கி அப்துல் கலாம் வரை வரலாறு சொல்லும் உண்மை இது.

* மதிப்பெண் குறைவாக இருந் தால்கூட பரவாயில்லை. தேர்ச்சியே பெறவில்லை என்கிறீர்களா? இதற்காக மாணவர்கள் தற்கொலை செய்ய துணிவதுதான் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத் தக்கது. முதலில் உங்கள் பிறப்பின் வெற்றி வரலாற்றை அறிவீர்களா? ரத்த சரித்திரம் அது. மாபெரும் யுத்தக் களத்தில் கோடிக்கணக்கான உயிரணுக்களுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய பின்னரே ஒற்றை உயிரணுவாக நீங்கள் உங்கள் தாயின் கருவறையில் நுழைய முடிந்தது.

அங்கும் போராட்டம்தான். நேரடி யாக சுவாசிக்க முடியாது, உண்ண முடியாது. தாய் சுவாசத்தில் இருந்து சுவாசித்தீர்கள். தாயின் ஊட்டத்தில் இருந்தே உறிஞ்சிக்கொண்டீர்கள். சிறு அறையில் பத்து மாதங்கள் பொறுமையாக சுருண்டுக்கிடந்த பின்னரே இந்த அழகிய உலகை தரிசிக்க முடிந்தது. இவ்வளவு பெரிய போர்க்களத்தில் வென்ற நீங்கள் புல் தடுக்கியதற்காக தடுமாறலாமா?

* இப்படி யோசியுங்கள். புதிய பைக் ஒன்று வாங்குகிறீர்கள். திடீரென்று அது பழுதாகி நின்றுவிடுகிறது. பழுதாகிவிட்டது என்பதற்காக அதை உடைத்தா போடுவீர்கள்? பழுது நீக்குவீர்கள்தானே. அப்படித்தான் உங்கள் தேர்வு முடிவுகளும். பழுதை சரி செய்யுங்கள். இன்னொரு விஷயம். உங்கள் தேர்வு முடிவுகளுக்கு காரணம் நீங்கள் மட்டுமல்ல. அதில் உங்கள் பெற்றோருக்கு பங்கிருக்கிறது. ஆசிரியர்களுக்கு பங்கிருக்கிறது. பள்ளிக்கு பங்கிருக்கிறது. குடும்பச் சூழலுக்கு பங்கிருக்கிறது. நீங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் பங்கி ருக்கிறது. எல்லோரும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

‘அஞ்சாமை அல்லால் துணை வேண்டா’ என்கிறார் வள்ளுவர். துணிவுடன் வாழுங்கள். வாழ்வ தற்கு, ரசிப்பதற்கு, வெற்றி பெறுவதற்கு, கொண்டாடுவதற்கு உலகத்தில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன, வாருங்கள்.

* தேர்வில் மதிப்பெண்கள் பெறு வது மட்டும் கல்வியல்ல. விஷயங் களைத் தெரிந்து கொள்வதற் கும் வாழ்க்கையை எதிர்கொள்வதற் கும்தான் கல்வி. நம்மை மகிழ்ச்சி அடையச் செய்வதே உண்மையான கல்வி. கவலை கொள்ளவும் அச்சம் கொள்ளவும் வைப்பதல்ல, கல்வி.

* இன்றைய கல்வி கட்டமைப்பை பார்த்து கவலையடைய வேண்டாம். அனைத்துக் குழந்தைகளும் உயிர் வாழ்வதற்கும், தன்னைப் பாது காத்துக்கொள்வதற்கும் முன்னேறு வதற்கும் சமவாய்ப்புகளையும் சம உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் கல்வி முறைக்காக நாடு முழுவதும் நமது மூத்த கல்வியாளர்கள் போராடி வருகிறார்கள். அதுவே உண்மையான மக்களாட்சி. நாளை உங்கள் குழந்தைகள் அதனை அனுபவிப்பார்கள். அன்று இன்னும் இனிது கற்றல். காத்திருப்போம்.

ஒன்றை ஒன்று உடையுங்கள்!

* ஒரு புள்ளிவிவரம். கடந்த ஆண்டு ஐ.ஐ.டி. உள்ளிட்ட அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற சுமார் ஒரு லட்சம் மாணவர்களில் வெறும் 450 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 31 பேர் மட்டுமே மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். அப்படி எனில் இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கற்றதெல்லாம் என்ன? பள்ளி பாடத்திட்டத்தை மட்டும் சொல்லி குற்றமில்லை. பாடங்களை தாண்டி படியுங்கள். படித்தவற்றை எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. கேள்வி கேளுங்கள். தர்க்கம் செய்யுங்கள். ஒன்றை ஒன்று உடையுங்கள். ஒருவேளை உங்களுக்கு கிடைக்கும் அந்த புதிய பதில் இன்னோர் உலகை திறக்கலாம்.

* எல்லோரும் பொறியி யல், மருத்துவம் என்று ஓடுகிறார்கள் என்பதற்காக மட்டும்/ பெற்றோர் வலியுறுத்துகிறார்கள் என்பதற்காக மட்டும் அதை நோக்கி ஓடாதீர்கள். உங்களுக்கு என்ன பிடிக்குமோ அந்தத் துறையை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு பிடிக்காத துறையை தேர்வு செய்வது என்பது மரபணு மாற்றப்பட்ட பயிர்களை நம் மண்ணில் நடுவதுபோலத்தான். அது எப்படி அதிகப்படியான செயற்கை உரத்தை கேட்குமோ அதுபோலத்தான் உங்களுக்கு பிடிக்காத துறை உங்கள் பெற்றோரின் செலவை அதிகரிக்கும்.

* சதமே தான் வேண்டும் என்று ஒற்றை பிடியில் இருக்காதீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையா? கவலைப்பட்டு கொண்டே காலத்தை கடத்த வேண்டாம். பின்பு இடம் கிடைப்பது சிரமமாகிவிடும். இன்று அனைத்துத் துறைகளில் நிறைய உட்பிரிவுகள் வந்துவிட்டன. பந்தாவுக்கு படிக்க வேண்டாம். மருத்துவம் கிடைக்க வில்லையா கால்நடை மருத்துவம் அல்லது பல் மருத்துவம் படிக்கலாம்.

அதேபோல சிவிலும் மெக்கானிக்கலும் எலெக்ட்ரானிக்கும் மட்டுமே பொறியியல் படிப்புகள் அல்ல. பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, கெமிக்கல், ஏரோநாட்டிக்கல், ஜியோ இன்ஃபர்மேஷன், புரொடெக்‌ஷன், மரைன் என ஏராளமான பிரிவுகள் பொறியியலில் கொட்டிக்கிடக்கின்றன. ஒரே துறையை பலரும் தேர்வு செய்து படிப்பதுதான் இன்றைய பொறியியல் துறையில் வேலைவாய்ப்பின்மைக்கு காரணம். தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து, நாளைய டிரண்டு என்ன என்பதை துறைசார் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து துறையை தேர்வு செய்யுங்கள்.

* நிறைவாக ஒன்று, முடிவுகள் எதுவாக இருந்தாலும் நேர்மறை சிந்தனையுடன் அணுகுங்கள். உங்கள் பெற்றோரின் கனவு வேறாக இருக்கலாம். ஆனால், உங்கள் கனவு என்ன என்பதை பொறுமையாக அவர்களுக்கு புரிய வையுங்கள். உங்கள் வாழ்வில் வசந்தம் மணம் வீசட்டும்!

குழந்தைகளை நம்புங்கள்!

பெற்றோர்களுக்கும் பள்ளி களுக்கும் இந்தக் கட்டுரை. குழந்தைகளுக்கு கற்பித்தல் எளிது. பெரியவர்களுக்கு கற்பிப்பதுதான் சிரமமாக இருக்கிறது. காரணம், அவர்கள் காலம் காலமாக செய்துக்கொண்ட கற்பிதங்கள்தான். பெரும்பாலும் தப்புத்தப்பான கற்பித்தங்கள். குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள்.

‘நம் குழந்தைகளை நாம் நம்பு கிறோமா?’ என்ற கேள்வியை எழுப்பியவர் ஜான் ஹோல்ட். கற்றல், கற்பித்தல் தொடர்பாகப் புதிய சிந்தனைவாதத்தை தோற்றுவித்த அமெரிக்கக் கல்வியாளர் அவர். ‘குழந்தைகளை நம்புங்கள்’ என்பது அவரது சிந்தனைவாதம். குழந்தை களின் தேர்வு தோல்விக்கு பள்ளி களையுமே பெற்றோரையும் அவர் காரணமாகச் சொல்கிறார். தோல்வி களுக்கு அடிப்படையாக அவர் கூறும் காரணம், ‘பயம்’.

குழந்தைகளின் படைப்புத் திறனைத் இன்றைய தேர்வு முறைகள் தடுப்பதாகக் குறிப்பிடுபவர், பெரும் கல்வி நிறுவனங்கள் சராசரியாக தங்கள் வேலை நேரத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தேர்வு வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். இதை அவர் வெறுமனே சொல்லவில்லை. பல ஆண்டுகள் ஆய்வுகளை செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை அணுகி ‘எவ்வாறு குழந்தைகள் தோற்கிறார்கள்?’ என்கிற புத்த கத்தை எழுதினார். உலகளவில் கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் அது.

அடுத்து பெற்றோர்கள். குழந்தை களைவிட நாம் அதிக அனுபவம் கொண்டவர்கள் என்கிற எண்ணமும், பொருளாதார ரீதியாகக் குழந்தைகள் நம்மைச் சார்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் குழந்தைகளின் படைப்புத் திறனை ஊக்கப்படுத்த தடையாக இருக்கின்றன என்கிறார் அவர். ‘எவ்வாறு குழந்தைகள் கற்கிறார்கள்?’ என்கிற அவரது புத்தகத்தில், ‘மனிதன் இயல்பாகவே கற்க விரும்பும் விலங்கு. தன்னிச்சையாகவும் சுதந்திர மாகவும் விட்டால் அதிகம் கல்வி கற்க முடியும்” என்கிறார்.

மதிப்பெண் குறைவாக எடுத்த தற்காக குழந்தையை திட்டும் முன்பு யோசித்துப் பாருங்கள். பள்ளிக்குச் சென்ற பின்புதானா உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தது? அம்மா என்று அழைத்தபோது அதற்கு வயது என்ன? அப்பா என்று உங்களை அழைத்தது எப்போது? உண்மையில், குழந்தைகளின் பிறக்க தொடங்கிய சில மணி நேரங்களில் இருந்தே தொடங்கிவிடுகிறது. உங்கள் குழந்தையிடம் ‘நன்றாகப் படியுங்கள்’ என்று சொல்லிப் பழகுங்கள். ‘நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும்’ என்று சொல்லாதீர்கள். இயல்பாக புரிந்துக்கொண்டு படிப்பதே நல்லது. அது உளவியல் ரீதியாக ஆரோக்கியமானதும் கூட. உங்கள் குழந்தையின் படிப்பு வியாபாரம் அல்ல. முதல் போட்டு லாபம் எடுக்க உங்கள் குழந்தை ஒன்றும் பலசரக்கு கடை இல்லை.

மிக முக்கியமாக பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் குழந்தைகளுடன் இருங்கள். குறைந்த மதிப்பெண்களோ அல்லது அதிக மதிப்பெண்களோ உங்கள் அன்பான வார்த்தைகள் மட்டுமே உங்கள் குழந்தையின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் என்பதை மறக்காதீர்கள்.

நிறைவாக ஒன்று, இன்றும் இந்தியாவில் ஆண்டுக்கு 1,35,000 குழந்தைகள் பிச்சையெடுக்கவும், முன்பின் தெரியாத நகரங் களில் வீட்டுவேலை பார்க் கவும், பாலியல் தொழி லுக்காகவும் கடத்தப் படுகிறார்கள். பெரும் பாலோர் மன அழுத் ததில் வீட்டை விட்டு ஓடிய குழந்தைகள். படிப்புக்கு பயந்து பள்ளியில் இருந்து இடைவிலகியவர்கள். குற்றம் யார் மீது? நிச்சயம் யோசியுங்கள்!

உல்லாச சுற்றுலா அல்ல கல்லூரி - மயில்சாமி அண்ணாதுரை

ஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சாதாரண கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்தவர். அவர் சொல்வதை கேட்போம். “1974-75ல் பொள்ளாச்சி என்.ஜி.எம். கலை அறிவியல் கல்லூரியில் படித்தேன். எனக்கு இயற்பியல் வாத்தியாராக இருந்தவர் குண்டுராவ். வகுப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இயற்பியல் எனக்கு பிடிக்கவில்லை. கவிதை, கட்டுரை, இலக்கியம் என்று எழுதிக்கொண்டிருப்பேன். தமிழ் மீதுதான் நாட்டம். ஆனால், குண்டுராவ் வாத்தியாரின் கற்பித்தல் முறை இயற்பியலில் என்னை ஆர்வம் கொள்ள வைத்தது.

கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் ஏவி முடித்ததும் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் பெங்களூருவில் இருந்தார். முதலில் அவர், ‘நினைவு இல்லை, எந்த அண்ணாதுரை?’ என்றார். வீட்டுக்கு நேரில் சென்று காலில் விழுந்து ஆசி பெற்ற பிறகு அவரிடம் சொன்னேன். ‘உங்கள் இயற்பியல் வகுப்பில் ரொம்ப சுமாராக படித்த மயில்சாமி அண்ணாதுரை நான்தான். இப்போதுதான் சந்திரயான் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிவிட்டு வருகிறேன்’ என்றேன். ஆனந்த கண்ணீருடன் என்னைக் கட்டிக்கொண்டார்.

எனவே, மதிப்பெண்களை வைத்து உங்களை எடைபோட வேண்டாம். பிளஸ் 2-வுக்கு பிறகு கல்லூரியை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். இயன்றவரை உங்கள் ஊருக்குள் அல்லது வீட்டுக்கு அருகிலுள்ள கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். தேர்வு செய்யும் முன்பு அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சுற்றியுள்ள உறவினர்களிடம் கல்வி நிறுவனத்தைப் பற்றி விசாரியுங்கள்.

கல்லூரி காலம் என்பது உல்லாச சுற்றுலா அல்ல. சிறு வயதில் நாம் சாப்பிடும் சத்தான உணவுதான் எதிர்காலத்தில் வலிமையாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அப்படியான சத்துணவு தான் கல்லூரியில் கற்கும் கல்வி.

பாடப்புத்தகத்தை தாண்டி படியுங்கள். நூலகங்களில் நேரத்தை செலவிடுங்கள். செய்தித்தாள்கள், உங்கள் துறை சார்ந்த உலகளாவிய பத்திரிக்கைகளை படியுங்கள்.

உங்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் உங்களை பட்டதாரியாக எதிர்பார்ப்பதில்லை. உங்களை மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, ஒரு முழுமையான, திறமையான பணியாளராகத்தான் எதிர்பார்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். கிராமத்தில் இருந்து உயர்க் கல்வி படிக்க வரும் மாணவர்கள் ஆங்கிலத்தை பார்த்து பயந்துவிட வேண்டாம். தாழ்வு மனப்பான்மை, பயம் காரணமாக வகுப்புகளை புறக்கணிக்க வேண்டாம். 3 மாதங்கள் தொடர்ந்து வகுப்பில் கவனமாக கேட்டு மறக்காமல் குறிப்பெடுங்கள். ஆங்கிலம் தானாக வந்துவிடும். நான் அப்படிதான் கற்றேன்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x