

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 2010-11-ம் ஆண்டில் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவ்வீடுகளை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகளைப் பெற, சமத்துவபுரம் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்களில், நலிவடைந்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் 19-ம் தேதி மாலை 5.45 மணி வரை அலுவலக வேலைநாட்களில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.