

சென்னை: திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் மாவட்டங்களில் ரூ.35.82 கோடியில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமிக்கும் வகையில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் ரூ.25 கோடி செலவில் 12 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்புக் கிடங்குகள், திருவண்ணாமலை மாவட்டம் பெருங்காட்டூரில் ரூ.2.65 கோடி மதிப்பில் 2ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள், ஈரோடு மாவட்டம் இச்சிப்பாளையத்தில் ரூ.3.30 கோடியில் 2 ஆயிரம் டன் கொள்ளளவில் 2 கிடங்குகள், திருப்பூர் நாதேகவுண்டம் பாளைத்தில் ரூ.4.10 கோடியில் 3 ஆயிரம் டன் கொள்ளளவில் 2 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமத்தில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்குச் சொந்தமான திருவாரூர் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் ரூ.77 லட்சத்தில் சேமிப்புக் கிடங்கு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.35.82 கோடியில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டிடம், விருந்தினர் அறை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உணவுத் துறை செயலர் முகமது நசிமுத்தீன், நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் சு.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.