

அமைச்சராக இருந்த செல்லூர் கே. ராஜூ மதுரை மேற்குத் தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என மக்கள் நலக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகி குற்றஞ்சாட்டினார்.
மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட சிக்கந்தர் சாவடி பகுதியில் உ.வாசுகி பேசியதாவது:
ஒரு அமைச்சராக மேற்குத் தொகுதிக்கு செல்லூர் கே. ராஜூ எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதியில் அடிப்படை பிரச்சினைகள் அதிகம் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட காளவாசல் பாலம் உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஏராளமான கண்மாய்கள் இந்த தொகுதியில் இருக்கிறது. அவற்றில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இந்தக் கண்மாய்களை தூர்வாரியிருந்தால் மேற்குத் தொகுதிக்கு இன்று தண்ணீர் பிரச்சினையே வந்திருக்காது. பல இடங்களில் குடிநீர் குழாய்கள் நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்டது. அவற்றை மாற்றவும், பழுது பார்க்கவும் மேயர், அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்க நூலகங்கள் இல்லை. மகப்பேறு மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனால் ஸ்கேன் இல்லை.
ரேஷன் கடைகளில் 7-ம் தேதிக்குப் பிறகு சென்றால் பொருட்கள் கிடைப்பதில்லை. மேயர், அமைச்சர், எம்பி ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்திருந்தால், இந்தப் பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வு கண்டிருக்கலாம். ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கையில் 21 ஆண்டுகளாக மதுரையில் கிரானைட் ஊழல் நடந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே இந்த முறைகேட்டில் பங்கு இருக்கிறது. அதனால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை எப்படி ஒழிக்க முடியும் என்றார்.