Last Updated : 06 May, 2016 02:27 PM

 

Published : 06 May 2016 02:27 PM
Last Updated : 06 May 2016 02:27 PM

ஜான்பாண்டியன் பிரச்சாரத்தால் திருவாடானையில் சிக்கலில் திமுக; கருணாஸுக்கு கிராமங்களில் நுழைய தடை

திருவாடானை தொகுதியில் தலித் மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. அதே சமயம் அதிமுக வேட்பாளர் கருணாஸ் கிராமங்களில் நுழைய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதி கள் உள்ளன. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. திருவாடானையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்த நடிகர் கருணாஸ் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் வேட்பாளர் முதுகுளத்தூரிலும், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ராமநாதபுரத்திலும் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் பரமக்குடி, திருவாடானையில் அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.

எப்போதும் அமைதியாக தேர்தல் நடைபெறும் திருவாடானை தொகுதியில் சமுதாய தலைவர்கள், நடிகர் போன்றவர்கள் போட்டியிடுவதால் விஐபி மற்றும் பதற்றமான தொகுதியாக மாறியுள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் நடிகர் கருணாஸ், திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான சுப.தங்கவேலனின் மகனும், திமுக மாவட்டச் செயலருமான த.திவாகரன் போட்டியிடுகின்றனர். மேலும் ஜான்பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் டி.தேவநாதன் யாதவ் (பாஜக), வி.மணிமாறன் (தேமுதிக), என்.அன்புபகுருதீன் (தேசியவாத காங்கிரஸ்), வி.பாண்டி (பாமக), உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரா. ராஜீவ்காந்தி (நாம் தமிழர் கட்சி), மு.ராமகிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்), அ.முகம்மது ஷெரீப்சேட் (எஸ்டிபிஐ), எஸ்.ரவிச்சந்திரன் (இந்து மக்கள் கட்சி) மற்றும் 10 சுயேச்சைகள் என மொத்தம் 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸின் கோட்டையான இத்தொகுதியில் 1952 முதல் இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸை சேர்ந்த கே.ஆர்.ராமசாமி 5 முறையும், அவரது தந்தை 4 முறையும் என ஒரே குடும்பத்தில் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளனர்.

ஜாதி, மத மோதல்கள் இல்லாத இத்தொகுதியில் இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் ஜாதி, மத ரீதியான வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளே அதிக முறை போட்டியிட்டுள்ளன. இந்த தேர்தலில் ஜாதி, மத ரீதியிலான அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் போட்டியிடுவதால் விஐபி தொகுதியாகவும், பதற்றமான தொகுதியாகவும் மாறியுள்ளது.

அதனால் மத்திய, மாநில உளவுத் துறை போலீஸார் இத்தொகுதியை உன்னிப்பாக கவனித்து தலைமைக்கு தகவல் அனுப்பி வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் வேட்பாளர்களால் ஜாதி, மத மோதல்கள் வந்துவிடக்கூடாது எனக் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x