

கடலூரில் நடந்த பிரச்சாரத்தில், தேர்தல் அறிக்கைதான் மக்கள் நலக் கூட்டணியின் பிரம்மாஸ்திரம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இயற்கை இடர்பாடுகளால் கடலூர் மாவட்டம் அடிக்கடி பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் கெடிலம் ஆற்றின் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று குறைந்தபட்ச செயல் திட்டத்திலும், தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டுள்ளோம். எங்கள் கூட்டணியின் பிரம்மாஸ்திரமே தேர்தல் அறிக்கைதான். தமிழக தேர்தல் வரலாற்றில் இப்படியொரு தேர்தல் அறிக்கை வெளிவந்தது இல்லை.
சாலை அமைப்பு முதல் மேம்பாலம் பணிகள் வரை கண்காணிக்க ஓய்வுபெற்ற பொறியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட நெறிமுறைக்குழு அமைக்கப்படும். மேலும், கணக்குகளை தணிக்கை செய்ய பொது தணிக்கைக்குழு அமைக்கப்படும். இதன் மூலமாக ஊழல் தடுக்கப்படுவதுடன், பணிகள் மேம்பாடு அடையும்.
கல்லூரி மாணவர்கள் தங்களது குடும்பத்தினரிடம், ஓட்டுக்கு வாங்கும் பணம் நமது வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் ஊழல் செய்து சம்பாதித்த பணம் என்பதை எடுத்துக் கூற வேண்டும்.
ஊழல் ஒழிய வேண்டுமெனில், திமுக, அதிமுகவை ஒழிக்க வேண்டும். எனக்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து கண்டன கடிதம் வந்துள்ளது.
அதில், நான் கருணாநிதியின் ஜாதி குறித்து பேசியதற்காக கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இனிமேல் இப்படி பேசக்கூடாது என்று ஆணையம் கூறியுள்ளது. கருணாநிதியின் ஜாதி குறித்து நான் எப்போதும் பேசியதில்லை. இதுகுறித்து கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்ட பிறகும் இந்த கடிதம் வந்துள்ளது, என்றார்