

கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூரை சேர்ந்த துரை மகன் ஷைஜின் (19), பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது மோட்டார் சைக்கிளில் சாமித்தோப்பை சேர்ந்த சொரிமுத்துவின் மகன் தேவ ஜாஸ்பர் (20), தென் தாமரைக்குளத்தை சேர்ந்த டேனியல் ஜெபராஜின் மகன் பிரவீன்(18) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி ஜீரோ பாயின்டில் இருந்து புதிய பேருந்து நிலையம்நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஷைஜின்ஓட்டினார்.
அப்போது எதிரே களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி பேருந்து நிலையம் நோக்கிவந்த அரசு பேருந்து ஷைஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷைஜின், தேவ ஜாஸ்பர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பிரவீன் மீட்கப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி. ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ஷைஜின், தேவஜாஸ்பர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கன்னியாகுமரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.