Published : 13 May 2022 10:33 PM
Last Updated : 13 May 2022 10:33 PM

மீனாட்சியம்மன் கோயில் ‘ஸ்மார்ட் சிட்டி’சாலைகளில் தொங்கும் மின்வயர்கள்: கம்பியில்லா மின்சார திட்டம் என்ன ஆனது?

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள ஸ்மார்ட் சிட்டி சாலைகளில் மின்சார வயர்கள் அலங்கோலமாக தொங்கிக் கொண்டிருப்பது கம்பியில்லா தடையற்ற மின்சார கட்டமைப்பு திட்டம் என்ன ஆனது என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது

நாட்டின் முக்கியமான 100 நகரங்களை தேர்வு செய்து அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் நோக்கமாக இருந்தது. அப்படி உருவாக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து கட்டமைப்பு வசதிகள், கம்பியில்லாத தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், பளபளக்கும் சாலைகள், பார்க்கிங் வசதிகள், டிஜிட்டல் மயமான பொதுச் சேவைகள் ஆகியவற்றை கிடைக்க செய்து தொழில்நுட்ப ரீதியில் நகரை மறுசீரமைப்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனால், இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் அதற்கு தேர்வான நகரங்களின் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சியில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் தேர்வு செய்து ரூ.995.55 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் 14 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமானது மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மூல ஆவணி வீதிகள், மாசி வீதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய மின்சார வயர் இல்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத விசாலமான ‘ஸ்மார்ட் ரோடு’ சாலைகளாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சித்திரை வீதியில் காபுள் ஸ்டோன் (நேச்சுரல் கற்கள்) கொண்டு சாலை அமைக்கப்பட்டது. மூல ஆவணி வீதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. மாசி வீதிகளில் சிமெண்ட் காங்கீரிட் ரோடு போடப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றி இந்த சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு போடப்பட்டது.

இந்த மூன்று சாலைகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் திட்டமிட்டப்படி பாதாளசாக்கடை, மழைநீர் கால்வாய், டெலிபோன் கேள்பி வயர், மின்சார கேபிள் வயர் உள்ளிட்டவை பதிக்க தனித்தனி கம்பார்ட்மெண்ட் போடப்பட்டது. மூல ஆவணி வீதியில் மட்டும் இன்னும் இந்த பணி முடியவில்லை. மற்ற இரு சாலைகளிலும், அதன் மேலே செல்லும் மின்சார வயர், கேபிள் வயர்கள் பூமிக்கடியில் செல்வதற்கான கம்பார்ட்மெண்ட் பணி முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது வரை மின்சார கேபிள் வயர்கள், டெலிபோன் கேபிள் வயர்கள் சாலைகளின் மேலே குறுக்கும், நெடுக்குமாக அலங்கோலமாக தொங்கி கொண்டிருக்கிறது.

மீனாட்சியம்மன் கோயில் சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு வருவோர், மாசி வீதிகள், சித்திரை வீதிகளில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் செல்வார்கள். அவர்கள் மத்தியில் குறுக்கும், நெடுக்குமாக செல்லும் மின்சார வயர்களால் ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைகள் மதுரையின் அழகை கெடுப்பதாக உள்ளது. மேலும், சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் தேர்கள் செல்வதற்காக கடந்த காலத்தை போலவே இந்த ஆண்டும் ஒரு நாள் முழுவதும் மின்தடை செய்து தேர்கள் வலம் வந்தன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கூறியபடி கம்பியில்லாத மின்சாரம் விநியேககத்திற்காக மின்சார வயர்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்தால் தேரோட்டத்திற்காக மின்சாரம் தடை செய்ய வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: "மின்சார வயர்கள் பூமிக்கடியில் கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம். அதற்கான நிதி ஒதுக்கி மின்சார வாரியம் தான் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவர்கள் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர். அதனால், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கூறியபடி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் ஸ்மார்ட் சாலைகளாக மாறும். அதற்காக திட்டமிட்டு தான் இந்த சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வெளி வீதி சாலைகளுமே இந்த சாலைகளை போல் ஸ்மார்ட் சாலைகள் உருவாக்கப்படும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x