

சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 ஆயிரத்து 701 வாக்குச் சாவடிகள் உள்ளன. அங்கு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான பல் வேறு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது. பதற்றமானவை என கண்டறியப்பட்ட 406 வாக்குச் சாவடிகளில் மத்திய நுண் பார்வையாளர், கூடுதல் துணை ராணுவப் படை, இணைய வசதியுடன் இணைக்கப் பட்ட கேமரா மூலம் கண்காணிப்பு என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த தேர்தலில் சென்னை மாவட்டத் தில் மட்டும் 39 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் 14 கம்பெனி துணை ராணுவப் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். அந்தந்த பகுதி போலீஸார், துணை ராணுவப் படையினரை வழிநடத்தினர். காவல்துறை வாகனம் அபாய ஒலி எழுப்பியவாறு முன்னே செல்ல, அதைப் பின் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் அணிவகுத்து சென்றனர். அதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப் பதற்கு ஏதுவாகவும், தேர்தல் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், மாநகர காவல்துறையுடன் இணைந்து சென்னை மாவட்டத்திலுள்ள 16 வாக்குச் சாவடிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார்