Published : 13 May 2022 01:19 PM
Last Updated : 13 May 2022 01:19 PM

பேருந்து கட்டண சலுகையால் பெண்கள் ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பேருந்து கட்டண சலுகை திட்டம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய திட்டமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை தமிழக அரசு செய்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முன்னதாக, தாம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் கட்சிப் பணிகள் மற்றும் அத்தொகுதிக்கு தமிழக அரசு சார்பில் செய்துள்ள பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார்.

பின்னர், அவர் பேசுகையில், "திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது, சாதனைகள் மட்டுமல்ல, ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருக்கிறோம். அதேபோல சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றைக்கு நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பறிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டண சலுகை.

இந்தத் திட்டத்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய அளவிற்கு திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலைக்குப் போகக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம். அதாவது நான் புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். ஆக இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைத்து அந்தப் பெண்கள் அதை என்ன செய்வதாக சொல்கிறார்கள் என்றால், அன்றாடச் செலவிற்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் பெண்கள் சேமிக்கக்கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக எத்தனை கோடி மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் நான் புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி, திமுக ஆட்சியாக இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது" என்று கூறினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x