Published : 13 May 2022 04:48 AM
Last Updated : 13 May 2022 04:48 AM

போக்குவரத்து ஊழியருக்கு 5% ஊதிய உயர்வு - தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் சிவசங்கர் உறுதி முழுவிவரம்

படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், தொமுச சார்பில் நடராஜன், சண்முகம் எம்.பி. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கமலக்கண்ணன், தாடி மா.ராசு, சிஐடியு சார்பில் சவுந்தரராசன் உள்ளிட்ட 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்காமல் 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறார்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏற்கெனவே, இந்த கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை ஏற்று, உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு முதல்கட்டமாக வரும் 14-ம் தேதி பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது.

கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ரூ.300 பேட்டா வழங்கப்படும். மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளில் பணியாற்றுவோருக்கு கூடுதல் பேட்டா, அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை ஆகிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. பணியாளர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான படிகளை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தண்டனை, வழக்குகளை ரத்து செய்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதில் உள்ள நிர்வாகச் சிக்கல்களை களைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க, புதிய ஒப்பந்தம் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் ரூ.1,000 வழங்கப்பட்டது. தற்போது ஊதியத்தில் 8 சதவீத உயர்வு வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசு சார்பில் முதல்கட்டமாக கடந்த 2019 செப்.1ம் தேதி முதல் 2 சதவீத உயர்வு, 2022 ஜன.1 முதல் 3 சதவீத உயர்வு என மொத்தமாக 5 சதவீத உயர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்.புதிய பணியாளர்கள் நியமனம் தொடர்பான கோப்பு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x