Published : 13 May 2022 07:33 AM
Last Updated : 13 May 2022 07:33 AM

தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை சட்ட உரிமையாக கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: தண்டனைக் கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதை சட்ட ரீதியாகவோ அல்லது அடிப்படை உரிமையாகவோ கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

2001-ல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ள தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவரதுதாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1,650 தண்டனைக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது.

அந்த அரசாணைப்படி எனது மகனை விடுவிக்க சிறைத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

எனவே, எனது மகனை முன்கூட்டியே விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

அப்போது, மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘மனுதாரருக்கு 2 கொலைவழக்குகளில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. சிறையில் நன்னடத்தை விதிகளையும்அவர் கடைபிடிக்கவில்லை. எனவே, அவரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது’’ என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, ‘‘ஒரு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி சட்ட ரீதியாகவோ அல்லது அடிப்படை உரிமைகள் ரீதியாகவோ கோர முடியாது’’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேநேரம், இந்த கருத்து, மற்றவழக்குகளில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிப்பதற்கு தடையாக இருக்காது என்றும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x