Published : 13 May 2022 07:39 AM
Last Updated : 13 May 2022 07:39 AM
சென்னை: இலங்கைக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்வது குறித்த அரசாணைக்குதடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறியும்திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
ஒரு கிலோ அரிசி ரூ.33.50 என்ற வீதத்தில் 40 ஆயிரம்டன் அரிசியை கொள்முதல் செய்யரூ.134 கோடி ஒதுக்கி அரசாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகம், ஒரு கிலோ அரிசியை ரூ.20-க்குவிற்பனை செய்கிறது. எனவே இந்திய உணவுக் கழகம் மூலமாகஇந்த 40 ஆயிரம் டன் அரிசியைகொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு ரூ.54 கோடி மிச்சமாகும்.
மேலும் இந்த கொள்முதலுக்கான டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியபோது இந்திய உணவுக்கழக அரிசி தரமற்றது என்றும், இதுதொடர்பாக தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், இதுதொடர் பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘மத்திய அரசின் அனுமதியுடன்தான் இந்த அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அவசர காலங்களில் இதுபோல கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத் தன்மை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்து, அதன்பிறகே தமிழக அரசு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது’’ என வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இலங்கைக்கான அரிசி கொள்முதலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT