Published : 13 May 2022 07:55 AM
Last Updated : 13 May 2022 07:55 AM

கோவை தனியார் மருத்துவமனைகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் 10 குழந்தைகள் அனுமதி: பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்

தமிழக கேரள எல்லையான கோவை வாளையார் சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்புள்ளதா என்பதை கண்டறிய உடல் வெப்பநிலை பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினர்.

கோவை: கோவை நகரில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்படும். உணவு அருந்தும்போது வலி ஏற்பட்டு, விழுங்க சிரமம் ஏற்படும்.

சருமத்திலும், தாடையிலும் தக்காளி நிறத்தில் சிறு சிறு திட்டுகள் வரும். இதுதான் இந்த தொற்றுக்கான அறிகுறியாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும் தன்மை கொண்டது.

கேரளாவில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கு இரு மாநில எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. வேகமாகபரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மாநகரில் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் குழந்தைகள் சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் இதுவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிமைப்படுத்தும் மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 7 நாட்களில் இது சரியாகிவிடும். அறிகுறிகள் தென்பட்டவுடனே வெந்நீர் அருந்த வேண்டும். ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் பாதிப்பை உணர்ந்தால் மருத்துவர்களை நாட வேண்டும்.

கரோனா தொற்றை பொறுத்தவரை கோவை மாநகரில் நாளொன்றுக்கு 2 அல்லது 3 பேருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அவர்களும் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பி விடுகின்றனர். தற்போதுள்ள சூழலில், கோவையில் யாரும் கரோனாதொற்று பாதிப்புக்காக மருத்துவமனையில் இல்லை. வீட்டுத் தனிமையிலேயே உள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் இருந்து கோவை வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, “தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. அறிகுறிகளுடன் வருபவர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x