Published : 13 May 2022 06:00 AM
Last Updated : 13 May 2022 06:00 AM

கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இதய துடிப்பு குறைவான நோயாளிக்கு இரு அறை ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தம்

கோவை அரசு மருத்துவமனையில் இரு அறை பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட நோயாளியுடன் மருத்துவ குழுவினர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இதய துடிப்பு குறைவான நோயாளிக்கு இரு அறை ‘பேஸ்மேக்கர்’ கருவி வெற்றிகரமாக பொருத்தப் பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர் களும் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இங்குள்ள இருதயவியல் துறையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நவீனமுறையில் அறுவைசிகிச்சை மூலம் கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (60) என்ற நோயாளிக்கு இரு அறை பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: 60 வயதுக்கு மேற்பட்டோரில் நூறில் ஒருவருக்கு இதய துடிப்பு குறைவு ஏற்படுகிறது. இந்த பாதிப்பானது பத்தாயிரத்தில் ஒருவருக்கு பிறவியில் இருந்து ஏற்படுகிறது. வயதுமூப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் அடைப்பு போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர சிகிச்சை என்பது பேஸ்மேக்கர் என்ற செயற்கை இதயதுடிப்பு கருவி பொருத்துவதாகும். இதுவரை கோவை அரசு மருத்துவமனையில் 15 பேருக்கு இந்த சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நோயாளிக்கு இரு அறை பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பேஸ்மேக்கர் என்பது இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் ஓர் அறையில் கருவியை பொருத்துவதாகும். இதில் சிலபேருக்கு இதயசெயல்பாடு ஒருசேர நிகழாமல், செயல் பாட்டுதிறன் குறைய வாய்ப்புள் ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வாகஇரு அறை பேஸ்மேக்கர் பொருத்துவதன் மூலம் இதயத் தின் அறைகள் ஒருசேர செயல்பட்டுஇதயதிறன் சீராக வைக்கப் படுகிறது. இதன்படி இதயத்தின் வலதுபுற வென்ட்ரிக்கிள் மற்றும் ஏற்றியம் ஆகிய இரு அறையிலும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும். இந்த இரு அறை பேஸ்மேக்கர் கருவியானது கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சையானது முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்மேக்கர் எப்படி இயங்குகிறது?

ஒரு சிறிய தீப்பெட்டி அளவுள்ள மருத்துவக் கருவி பேஸ்மேக்கர். குறைந்த இதயத் துடிப்பை அதிகரிக்க, உடலில் பொருத்தப்படும் இந்தக் கருவி, பேட்டரி மூலம் இயங்குகிறது. இதயத் துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என அறிந்து, துடிப்பு சாதாரணமாக இருந்தால், பேஸ் மேக்கர் எவ்வித மின்சாரத்தையும் கொடுக்காது. இதயத் துடிப்பு குறைந்தால் பேட்டரி, சர்கியூட் மூலம் மின்சாரத்தைச் செலுத்தி, இதயத்தைத் வேகமாக துடிக்கச் செய்யும். தேவையான நேரத்தில் மட்டுமே இந்தக் கருவி இயங்கும். இதன் ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியில் உள்ள பேட்டரியை மட்டும் மாற்றினால்போதும். ‘பேஸ்மேக்கர்’ கருவியை எந்த வயதினருக்கும் பொருத்தலாம். கருவியை பொருத்த வயது தடையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x