

சென்னை: சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் ‘நீல சீருடை அணிந்த தேவதைகள்’ என்ற தலைப்பில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி என்விஎன் சோமு எம்.பி., நடிகை ஜூலி, அப்போலோ புற்றுநோய் மையத்தின் புற்றுநோயியல் மற்றும் பன்னாட்டு செயல்பாடுகள் துறை தலைவர் ஹர்ஷத்ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி என்விஎன் சோமு எம்.பி. பேசியதாவது: மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பணிகளின் காரணமாகவே கரோனா தொற்றில்இருந்து பல உயிர்கள் காப்பற்றப்பட்டன. செவிலியர்கள் இல்லாவிட்டால் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியாது.
செவிலியர்களின் பணி மகத்தானது. அவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் சுயநலமற்ற மருத்துவ சேவையை வழங்குகின்றனர். செவிலியர்கள் தங்கள் உயி ரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது.
தொடர் சிகிச்சையால் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளை அக்கறையுடனும், கனிவுடனும் செவிலியர்கள் கவனித்துக் கொள்வதால் அவர்கள் விரைவாக குணமடைகின்றனர். உயிர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.