

சென்னை: தொழில்நுட்பம் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
சைபர் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓடிபி பெறுதல், க்யூஆர் கோட் அனுப்புதல், கேஒய்சி அப்டேட் என்ற பெயரில் லிங்க் அனுப்புதல் உள்ளிட்டவை மூலம் மோசடிகள் நடைபெறுகின்றன.
மேலும், அதிகம் சம்பாதிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், ஓய்வு பெற்றவர்களைக் குறிவைத்தும் சைபர் க்ரைம் கும்பல் ஆங்காங்கே மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
எனவே, இதுபோன்ற கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுசென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள், வெளிநாட்டவர்போலசமூக வலைதளங்களிலோ அல்லது இ-மெயிலிலோ தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வர்த்தகம் அல்லது திருமணம் குறித்து, உரிய நபர்களின் மூலம் விசாரித்து அறிய வேண்டும். வெளிநாட்டவர் யாரும் பணம் அனுப்புமாறு கேட்டால், உடனடியாக அவர்களது தொடர்பைத் துண்டித்துவிட வேண்டும்.
பணம் எதுவும் அனுப்பக் கூடாது.ஒருவேளை சிறிய அளவில் பணம் அனுப்பிவிட்டால், அந்தப் பணம் திரும்பிக் கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் அனுப்பக் கூடாது. நீங்கள் அனுப்பும் பணம் எதையும், உங்களுடன் பேசும் நபர்கள் திருப்பித்தரப் போவதில்லை. எனவே, முன்பின் தெரியாத நபர்களுடன் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் பேசுபவர்களை நம்பி, பணம் அனுப்பக் கூடாது. இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர் யாரும் பணம் அனுப்புமாறு கேட்டால், உடனடியாக அவர்களது தொடர்பைத் துண்டித்துவிட வேண்டும்