

ஆவடி: ஆவடி அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியை நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅரசு மருத்துவமனை வளாகத்தில்,ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.26.90 கோடி செலவில் 2-ம் நிலை பராமரிப்பு அரசு மருத்துவமனை கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மருத்துவமனை கட்டிடம் 1.79 ஏக்கர் நிலப்பரப்பில், 4 தளங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
பொதுப்பணித் துறை அமைச்சர்எ.வ.வேலு கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியை நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில்கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம், சுமார் 54,235 சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே அறை, ஆண், பெண் நோயாளிகளுக்கென முறையே 30 தனி படுக்கைகள் கொண்ட அறைகள், 2 அறுவை சிகிச்சை அறைகள் உள்ளிட்டவை அமைய உள்ளன.
பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படுவதால் பல ஆண்டு காலம் பயன்படுத்துகின்ற வகையில் உறுதி தன்மையோடு கட்டப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் விஸ்வநாத், பொதுப்பணித் துறை (கட்டிடம் மற்றும் கட்டுமானம்-மருத்துவம்) கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்து அரசு ராஜசேகர்,செயற்பொறியாளர்கள் நாராயணமூர்த்தி, சிவகாமி, புனிதவேல், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) இளங்கோவன், ஆவடிமாநகராட்சி ஆணையர் உதயகுமார் உடனிருந்தனர்.
முன்னதாக, மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் சிற்பி தீனதயாளன் சிற்பக் கூடத்தில் நடைபெற்று வரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை தயாரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்த சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அரசு சார்பில் அமைக்கப்படவுள்ளது.