Published : 13 May 2022 07:08 AM
Last Updated : 13 May 2022 07:08 AM
கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கல்பாக்கம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக வேலூர் பகுதிகளுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்பாக்கம்-வேலூர் இடையே இயக்கப்படும் தடம் எண் 157 கொண்ட நேரடி பேருந்து, செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் தடம் எண் 108 என்ற பேருந்து சேவைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சுற்றுப்புற கிராம மக்கள் கூறும்போது, "கல்பாக்கம் மற்றும் வேலூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து அதிகளவில் இயக்கப்பட்டு வந்த 157 என்ற பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் வரையில் இயக்கப்பட்டு தடம் எண் 108 பேருந்து, செங்கல்பட்டு வரையில் மட்டுமே இயங்குகிறது. அதிகாரிகளிடம் முறையிட்டால், வேலூர் பணிமனையில்தான் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது மற்றும் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் செல்ல மாநகர பேருந்துகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்" என்றனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "கல்பாக்கம்-வேலூர் இடையே தடம் எண் 157 பேருந்துகள் தற்போது சீராக இயக்கப்பட்டு வருகின்றன. கல்பாக்கத்திலிருந்து காலை 4:50, 5:30, 6:00, 7:20 மற்றும் பிற்பகல் 2:30, 3:20, மாலை 5:00 இரவு 9 மணிக்கு தடம் எண் 157 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலூர் பகுதியிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகின்றனவா என கண்காணிக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT