Published : 13 May 2022 06:25 AM
Last Updated : 13 May 2022 06:25 AM

மாற்றுத்திறனாளியின் 15 ஆண்டுகள் அலைச்சலுக்கு முடிவு: ஒரு மணி நேரத்தில் மூன்று சக்கர வாகனம் வழங்கல்

உதயகுமார்

ராமநாதபுரம்: மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு 15 ஆண்டுகள் அலைந்த பரமக் குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ஒரு மணி நேரத்தில் அதிகாரிகள் ஸ்கூட்டர் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்துநிலையப் பகுதியைச் சேர்ந்த நாதன் மகன் உதயகுமார் (32). குழந்தையாக இருந்தபோது போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியானார். இவர் பெற்றோரைவிட்டு தனியாக வசித்து வருகிறார். பி.ஏ. பட்டதாரியான இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்தும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் ரூ.1000 மாத உதவித் தொகையை வைத்தும் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு தவழ்ந்தபடி சிரமப்பட்டு வந்தார்.

அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது உதயகுமார் கூறுகையில், எலக்ட்ரீஷியன் வேலைக்கு உதவியாக இருக்கும் வகையில் 2000-ம் ஆண்டில் அரசு நலத்திட்டத்தில் எனக்கு பேட்டரி ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. அது சில ஆண்டுகளில் பழுதாகிவிட்டது. அதனையடுத்து கடந்த 15 ஆண்டுகளாக 3 சக்கர ஸ்கூட்டர் கேட்டு, ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து வருகிறேன் என்று கூறினார்.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) கதிர்வேலிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர். உடனடியாக உதயகுமாரின் மனு தொடர்பான அலுவலக கோப்புகளை பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கதிர்வேல் தெரிவித்தார்.

அதனையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உத்தரவின்படி, ஒரு மணிநேரத்தில் உதயகுமாருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் அலைந்தும் கிடைக்காத வாகனம், ஒரு மணி நேரத்தில் கிடைத்தது மாற்றுத் திறனாளி உதயகுமாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x