

மடத்துக்குளம் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் திடீரென விலகி, அதிமுகவுக்கு ஆதரவு தெரி வித்து அக்கட்சியில் இணைந்தார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் சட்டப்பேரவைத் தொகுதி யில் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகி முத்துக்குமார் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் திடீரென அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து முத்துக்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘நான் சார்ந்துள்ள கட்சியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தில் எனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை.
பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அணுகியபோதும் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அதனால் நான் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலக முடிவு செய்தேன்.
தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக் கட்சியில் இணைந்துள்ளேன். இனி மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக வெற்றிக்காக பாடுபடுவேன். மே 10 (இன்று) முதல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன்’ என்றார்.
உடுமலை நகர பாஜக பொதுச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான சின்ராஜ் கூறும்போது, ‘அதிமுகவுக்கு தாவியிருப்பதன் மூலம் அவரது நோக்கம் தெளிவாகியுள்ளது’ என்றார்.
‘எதுவும் செய்வதற்கில்லை’
தேர்தல் நடத்தும் அலுவலர் காமாட்சிதாசன் கூறும்போது, ‘மடத்துக்குளம் தொகுதியில் உள்ள 271 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் அச்சடித்து வரப்பெற்றுவிட்டன. அவற்றை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் கட்சி மாறியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. வேட்பாளர் வாபஸ் பெறுவதற்குரிய காலக்கெடுவும் முடிந்துவிட்டது. இனி எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.