திராவிட உணர்வு இல்லாத கட்சி அதிமுக: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சிவகங்கையில் அரண்மனைவாசல் முன் திமுக வேட்பாளர் ம.சத்தியநாதனை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: தமிழக முதல்வராவதற்கு ஜெயலலிதாவுக்கு 3 முறை வாய்ப்பு கொடுத்தும் நடைமுறையை மாற்றிக்கொள்ளாதவர், 4-வது முறையாகவா மாற்றிக்கொள்ளப்போகிறார். எனக்கு நம்பிக்கை கிடையாது. எனவே, இந்தத் தேர்தலில் அவருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுக கட்சியின் பெயரில் மட்டுமே திராவிடம் உள்ளது. ஆனால், திராவிட உணர்வு இல்லாத கட்சி அதிமுக.
தமிழை பயிற்றுமொழியில் படித்தவர்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாது. இந்தி மொழி பேசாத தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது. சுமார் 9 ஆண்டு கழித்து 5 நீதிபதிகள் இடைக்காலத் தீர்ப்பை அளித்திருக்கின்றனர். மாநில அரசின் பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் இனி மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது. அகில இந்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் நுழைய முடியும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதனை மத்திய, மாநில அரசுகள் எதிர்க்கவில்லை. ஏன் அவசரச் சட்டத்தை கொண்டுவரவில்லை. மத்திய அரசு மாநில உரிமைகளில் மூக்கை நுழைக்கிறது. மத்திய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கிறது. மத்திய அரசிடமிருந்து மாநில உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். அதிமுக அரசு நம் உரிமைகளை பாதுகாக்காது. திமுக அரசுதான் நம் உரிமைகளை பாதுகாக்கும். எனவே, திராவிட உணர்வுள்ள திமுக அரசை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தவேண்டும் என்றார்.
