மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: மண்டல குழு கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். இந்த மாமன்ற கூட்டத்திற்கு முன்பாக மண்டல குழு கூட்டம் மற்றும் நிலைக் குழுக்களின் கூட்டம் நடைபெற வேண்டும். மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலைக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மாமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பிறகு மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதன்படி சென்னை மாநகராட்சி உள்ள 15 மண்டலங்களின் மண்டல குழு கூட்டங்களை மாதம் தோறும் 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி 15 மண்டலங்களின் மண்டல குழு கூட்டங்கள் மண்டல தலைவர்கள் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் தவிர்த்து யாரும் கலந்து கொள்ள முடியாது.

இந்நிலையில் தண்டையார் பேட்டை மண்டல குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் விதிகளை மீறும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிலையில், இந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மண்டல குழு கூட்டங்களின் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது, இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். விதிகளை மீறி கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தண்டையார் பேட்டை மண்டல அலுவலருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in