Published : 12 May 2022 05:05 PM
Last Updated : 12 May 2022 05:05 PM

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில்14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடந்தது. ஏற்கெனவே 3 கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில்,போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் " போக்குவரத்துத் துறையில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல், பத்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர் என்ற கோரிக்கை அதிகமாக முன்வைக்கப்பட்டது. இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் முதற்கட்டமாக, வரும் 14-ம் தேதி இறந்துபோன போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முதல்வரால் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பேட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது 300 ரூபாயாக வழங்கப்படும். மகளிர் இலவச பயணம் செய்கின்ற பேருந்துகளில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு பேட்டா தொகை கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திற்கும் ஒரு நிலையாணை இருப்பதை மாற்றி, அனைத்து போக்குவரத்துக் கழகத்திற்குமான பொது நிலையாணை கொண்டு வரவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பணியாளர்களுக்கு 15 பல்வேறு வகையான படிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து கணக்கெடுப்பு நடத்தி, பதவி உயர்வு வழங்கப்படும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வேண்டும் என்ற கோரிக்கை ஓய்வுபெற்றோர் சங்கம், மற்றும் தற்போது நடைபெற்ற தொழிற்சங்க பேச்சுவார்த்தையின் மூலம் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டு, ஜூன் மாதத்துடன் டெண்டர் முடிவடைகிற சூழலில் இருப்பதால், புதிய டெண்டர் கோரப்பட்டு, அதில் தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவெடுக்கப்படும்.

சம்பள உயர்வு குறித்து கடந்தமுறை நடந்த பேச்சுவார்த்தையில் இடைக்கால நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கியிருந்தார்கள். தற்போது அதில் 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வைத்திருந்த கோரிக்கையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறோம்.
அதில் கடந்த பேச்சுவார்த்தையில் நடந்த ஒரு குளறுபடி சரிசெய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இல்லாமல், சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெரும்பாலான சங்கங்கள் வைத்துள்ளனர். இதுதொடர்பாக நிதித்துறையுடன் கலந்தாலோசித்து, தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x