ஓசூரில் தொடர் மழையால் கொத்தமல்லி பயிர்கள் சேதம்: ஒரு கட்டு கொத்தமல்லி விலை ரூ.30 முதல் ரூ 40 வரை அதிகரிப்பு

ஓசூரில் தொடர் மழையால் கொத்தமல்லி பயிர்கள் சேதம்: ஒரு கட்டு கொத்தமல்லி விலை ரூ.30 முதல் ரூ 40 வரை அதிகரிப்பு
Updated on
2 min read

ஓசூர்: ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக கொத்தமல்லி உற்பத்தி குறைந்துள்ளதால, ஒரு கட்டு கொத்தமல்லியின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர்.

இங்கு விளையும் தரமான மற்றும் வாசம் மிகுந்த கொத்தமல்லி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தினசரி விற்பனையகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இங்கு விளையும் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் ஓசூர் கொத்தமல்லிக்கு பெங்களூரு காய்கறி சந்தை பிரதான சந்தையாக விளங்கி வருவதால் தினசரி காலை, மாலை இருமுறையும் சரக்கு வாகனங்களில் கொத்தமல்லி பெங்களூரு நகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் கொத்தமல்லியை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு கோடைகாலத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதியன்று ஆலங்கட்டி மழையுடன் தொடங்கிய கோடை மழை, தொடர்ந்து ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் அதிகனமழை பெய்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி தோட்டத்தில் மழைநீர் தேங்கி 50 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓசூர் சந்தைக்கு கொத்தமல்லி வரத்து குறைந்து விலை உயரத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் ஒரு கட்டு ரூ.10க்கு விற்பனையாகி வந்த கொத்தமல்லி, தற்போது தொடர் மழை காரணமாக ஒரு கட்டு ரூ.30 முதல் ரூ.40வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஓசூர் ஒன்றியம் எடவனஹள்ளி கிராமத்தில் கொத்தமல்லி பயிரிட்டுள்ள விவசாயி மதுசூதனன் கூறியதாவது, "ஒரு ஏக்கர் கொத்தமல்லி பயிரிட 8 கிலோ முதல் 10 கிலோ வரை கொத்தமல்லி
விதைகள் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் கொத்தமல்லி பயிரிட ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. கொத்தமல்லி பயிரிடப்பட்ட நாளில் இருந்து 35 நாள் முதல் 45 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லியை 10ஆயிரம் கட்டுகள் முதல் 12 ஆயிரம் கட்டுகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

நடப்பாண்டில் கோடை மழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருவதால் கொத்தமல்லி தோட்டத்தில் மழை நீர் தேங்கி நின்று கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக ஆலங்கட்டி மழையில் கொத்தமல்லி தோட்டம் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் வழக்கமாக கொத்தமல்லி பயிட்டு வரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடரும் பட்சத்தில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது." என்று விவசாயி மதுசூதனன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in