Last Updated : 12 May, 2022 04:43 PM

 

Published : 12 May 2022 04:43 PM
Last Updated : 12 May 2022 04:43 PM

குளிர்சாதன அறைக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூல்: கோவை உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம்

கோவை: குளிர்சாதன அறைக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலித்த கோவை உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த நிவாஸ்ராஜ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "நானும் எனது நண்பரும் 2019 மே 2-ம் தேதி கோவை ராம்நகர் சரோஜினி தெருவில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றோம். அங்கு உணவருந்திய பிறகு, ஹோட்டல் பணியாளர் ரசீது அளித்தார். அதில் மொத்தம் ரூ.803 என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த ரசீதில் ஏசி கட்டணம் ரூ.20 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹோட்டலே ஏசி ஹோட்டல் எனும்போது அதற்கென தனியே கட்டணத்தை அவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கக்கூடாது.

மேலும், அவ்வாறு வசூலிக்க வேண்டுமெனில் மெனு அட்டையில் அதை குறிப்பிட்டிருக்க வேண்டும். எனவே, எங்களிடம் ஏசி கட்டணம் குறித்து தெரிவிக்காமல் கட்டணத்தை வசூலித்திருக்கக்கூடாது. மேலும், எங்களிடம் ஏசி அறைக்கு கட்டணத்தை வசூலித்ததோடு, அதற்கு ஜிஎஸ்டியாக ரூ.1-ம் சேர்த்து வசூலித்தனர். இதையடுத்து, ஏசி கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.20 அதற்கு ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் மே 8-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன்.

இதையடுத்து, ஜூலை 5-ம் தேதி அதனை மறுத்து அவர்கள் பதில் அனுப்பியிருந்தனர். எனவே, ஏசி அறைக்காக என்னிடமிருந்து பெறப்பட்ட ரூ.20, அதற்கான ஜிஎஸ்டி கட்டணம் ரூ.1 ஆகியவற்றை திருப்பி அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் ஹோட்டலுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் ஜி.சுகுணா, பி.மாரிமுத்து ஆகியோர், "மனுதாரரிடமிருந்து குளிர்சாதன வசதிக்காக கூடுதலாக வசூலித்த ரூ.21-ஐ ஹோட்டல் நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரத்தை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x