Published : 12 May 2022 05:53 AM
Last Updated : 12 May 2022 05:53 AM

இலங்கை அசாதாரண சூழல்: அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவலாம் - தமிழகத்துக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை

சென்னை: இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்களால் அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் பல குறிவைத்து சூறையாடப்பட்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌சவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தொடரும் வன்முறையால் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஏராளமான வாகனங்கள், பொதுச் சொத்துகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. போராட்டங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அண்மைக் காலமாக அந்நாட்டிலிருந்து தமிழகத்துக்கு படகுகள் மூலம் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

50 கைதிகள் தப்பியதாக தகவல்

இலங்கையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளால் அந்நாட்டிலிருந்து அகதிகள் போர்வையில் தமிழகத்துக்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உளவுத்துறை, தமிழக உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தையும் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை சிறையிலிருந்து சுமார்50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச மற்றும் சமூக விரோதிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

எனவே, சந்தேகப்படும்படியான படகுகள் தமிழக எல்லைக்குள் நுழைந்தால் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழக கடலோர காவல் குழுமத்தினர், கடலோர காவல் படையினர் விழிப்புடன் செயல்பட்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும்படி சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், கடலோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தியுள்ளார்.

கடற்படையினர் தீவிர ரோந்து

மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து அகதிகள் போர்வையில் தேச விரோதிகள் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுக்க தனுஷ்கோடி முதல் நாகப்பட்டினம் வரையிலான பாக். ஜலசந்தி கடலோரப் பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x