பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கினைப்பாளர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, "திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்று உறுதியளித்தார்.

அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார், ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார் நிதியமைச்சர்.

திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதற்கான தீர்வுகள் தர நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்கள் கோரிக்கையை நிறைவற்றவில்லை என்றால், போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in