

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிப்மரின் அலுவலகப் பணிகளுக்கு அலுவல் மொழிகள் பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. சுற்றறிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் உத்தரவுகளின்படியே இருக்கும்.
அலுவல் மொழிக் கொள்கையின்படி, பெயர் பலகைகள் மற்றும் அடையாளப் பலகைகள், மத்திய அரசாங்கத்தால் பொதுமக்களின் தகவலுக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டும். இந்தி பேசாத பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகங்கள் பிராந்திய மொழியில் அதாவது (தமிழ்), இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும். நிறுவனத்தின் அலுவல் பயன்பாட்டுக்கான பெயர் பலகைகள், அடையாள பலகைகள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகள் (Letter head) போன்றவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
எனவே, ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பிற உறுப்பினர்களுடனான மொழி பரிமாற்றங்கள் அனைத்தும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்தி கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி மொழி அலுவல் துறை (இந்தி செல்) இங்கு உள்ளது. புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அமைந்துள்ள பிற நிறுவனங்களிலும் இந்தி செல்கள் உள்ளன.
கடந்த காலத்தைப் போலவே எந்த மாற்றமும் இல்லாமல், அரசாங்கக் கொள்கைகளை ஜிப்மர் தொடர்ந்து பின்பற்றி வரும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜிப்மரில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறி, ஜிப்மர் இயக்குநரின் சுற்றறிக்கை நகலை எரிக்க முயன்ற தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.