கோவையில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 14.70 டன் மாம்பழங்கள், சாத்துக்குடி பறிமுதல்

கோவை பெரியகடை வீதியில் உள்ள கடையில் ரசாயன பாக்கெட்டுகள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை நேற்று பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
கோவை பெரியகடை வீதியில் உள்ள கடையில் ரசாயன பாக்கெட்டுகள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை நேற்று பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
Updated on
1 min read

கோவை: கோவையில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 14.70 டன் மாம்பழங்கள், சாத்துக்குடியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

கோவை வைசியாள் வீதி, பெரிய கடை வீதி, பவள வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கு.தமிழ் செல்வன் தலைமையிலான குழுவினர் நேற்று 45 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ‘எத்திலீன்’ ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை நேரடியாக மாம்பழம் மற்றும் சாத்துக்குடி பெட்டிகளின் உள்ளே வைத்து பழுக்க வைக்க பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 12.35 டன் மாம்பழங்கள், 2.35 டன் சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.

இதுதொடர்பாக கு.தமிழ்செல் வன் கூறும்போது, “பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.8.10 லட்சம் ஆகும். ஆய்வின் முடிவில் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற திடீர் கள ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும். கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிழக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்று ரசாயனங்கள் கொண்டு மாம்பழங் களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்று உணவு பொருட் களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in