Published : 12 May 2022 06:23 AM
Last Updated : 12 May 2022 06:23 AM

தமிழகத்தில் மின்வெட்டு என்பது உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் 24 மணி நேர நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர்.

சென்னை: தமிழ்நாட்டில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பானது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோடை காலத்தில் மின்சாரத்தை சீராக விநியோகம் செய்வது குறித்து அனைத்து தலைமைப் பொறியாளர்களுடன் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2019, 2020 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது தமிழகத்தில் மின் நுகர்வு அதிகமாக இருக்கிறது. இருப்பினும் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை உள்ள நிலையில், ஒன்றிய அரசால் 50 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. பின்னர் முதல்வர் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் விளைவாக தற்போது 57 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு நிலக்கரி கிடைக்கிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 8.7 சதவீதம் அளவுக்கு மின் நுகர்வு அதிகரித்திருக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கப் பெறும் மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுவதால், நிலக்கரி பயன்பாடு ஒரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவது உண்மைக்குப் புறம்பான செய்தி. மக்களுக்குதடையற்ற மின்சாரத்தை வழங்க அரசுஅனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 2 வாரங்களாக பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் மின்சார உட்கட்டமைப்பில் மிகுந்தசேதம் ஏற்பட்டுள்ளது. அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு பராமரிப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின்கீழ் 26,300 விநியோக மின்மாற்றிகள், 13 ஆயிரம் கி.மீ. நீள உயர் மின்னழுத்த மின்பாதை, 3 ஆயிரம் கி.மீ. நீள தாழ்வழுத்த மின் பாதைகள் நிறுவப்படும். இதனால் மின்பாதையில் ஏற்படும் இழப்பு கணிசமாக குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x