Published : 12 May 2022 06:39 AM
Last Updated : 12 May 2022 06:39 AM
ஆவடி: ஆவடி அருகே கோயில்பதாகை யில் ரூ.20 கோடி மதிப்பில் பசுமடம் அமைப்பதற்கான இடத்தை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “திருவள்ளூர் மாவட்டம்- ஆவடி அருகே கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், ஆவடி அருகேகோயில்பதாகை பகுதியில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் பசுமடம் அமைப்பதற்கான இடத்தை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அவர்கள் கோயில்பதாகை சுந்தரராஜப்பெருமாள் கோயில், திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில் ஆகிய கோயில்களிலும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து, ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தஆய்வின் அடிப்படையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தரவும், யானைகள் மற்றும் பசுக்களை பராமரிக்கவும், கோயில்களின் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2022–23 மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட 165 அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும். அதில் முதற்கட்டமாக, கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விரைவில், பசு மடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயார் செய்து, ஒப்பந்தப் புள்ளிகோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயிலில் எதிரே உள்ள குளம் நகராட்சி நிர்வாகத்தால் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் இந்து சமயஅறநிலையத் துறை அக்குளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பச்சையம்மன் கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் ந.தனபால், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT