

சென்னை: சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கு தொடர்பாக, டிஜிபி சைலேந்திர பாபுவுடன், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் நேற்று ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல்நிலைய போலீஸார் கடந்த மாதம் 18-ம் தேதி கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த பட்டினப்பாக்கம் விக்னேஷ்(25), அவரது நண்பர் திருவல்லிக்கேணி சுரேஷ் (28) ஆகியோரை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த விக்னேஷ் மறுநாள் மரணம் அடைந்தார். அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக விக்னேஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
விக்னேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில், உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பாக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமைக் காவலர் முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகிய 6 பேர்கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
உறவினர்களிடம் விசாரணை
மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை தரப்பு, விக்னேஷ் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்னேஷின் சகோதரர் வினோத்தை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றுள்ளனர். தற்போது விக்னேஷ் வழக்கு விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், தமிழக காவல் துறை சட்டம்-ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை நேற்று காலை டிஜிபி அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, விக்னேஷ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.