

இளைஞர்கள் அரசியல் ஆர்வம் மிகுந்து காணப்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது #TweettoVijayakant என்ற ஹாஷ் டேக் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு விஜயகாந்த் ட்விட்டரில் பதிலளித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் (>அச்செய்தியை படிக்க).
அதனைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இளைஞர்களிடம் உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தூரம் அரசியல் அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தால் இது தான் தருணம்.
அதிமுக, திமுக இருவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தருணம் இது. நீங்கள் அரசியலில் இருந்து அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு வேலையிலும் ட்விட்டரில் உங்களிடம் பேசியிருக்கிறேன். அதிமுக, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தருணம் வந்துவிட்டது. இளைஞர்களாகிய உங்களிடம் வாக்கு கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லி மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும்" என்று விஜயகாந்த் பேசியுள்ளார்.