Published : 19 Jun 2014 11:00 AM
Last Updated : 19 Jun 2014 11:00 AM

பன்நோக்கு மருத்துவமனையில் மலிவு விலை உணவகம் வேண்டும்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மலிவு விலை உணவகத்தை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பன்நோக்கு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கான உணவு மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயா ளிகளுடன் வருபவர்களுக்காக தரைத்தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உணவகங்கள் உள்ளன. ஆனால், அங்கு விலை உயர்வாக இருப்பதால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.

மேலும் அந்த உணவகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்குவதால், மற்ற நேரங்களில் கடைகளைத் தேடி வெளியே செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே, நோயாளிகளுடன் வருபவர்கள், துப்புரவு மற்றும் கடைநிலை ஊழியர்கள் உட்பட பலர் அருகில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் உள்ள கேன்டீன்களை பயன்படுத் துகின்றனர். இதுகுறித்து தனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ள அம்சம்மா கூறுகையில், “அப்பாவுக்கு மருத்துவமனையில் உணவு வழங்கப்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்காக மருத்துவ மனையில் உள்ள உணவகத்தில் வெரைட்டி ரைஸ் ரூ.45 வரை விற்கப்படுகிறது. இரண்டு பேர் சாப்பிடவே, ரூ.100 செலவாகிறது. ஆனால், எம்.எல்.ஏ ஹாஸ்டல் கேன்டீனில் லெமன் சாதம், தக்காளி சாதம் ஆகியவை ரூ.25க்கு விற்கப்படுகிறது. மருத்துவமனை உள்ளேயே ஒரு அம்மா உணவகம் இருந்தால், வசதியாக இருக்கும்,” என்றார்.

மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் கூறுகையில், “இங்குள்ள உணவகத்தில் காபியின் விலை ரூ.10. ஆனால் எம்.எல்.ஏ ஹாஸ் டல் கேன்டீனில் டீ ரூ.7, காபி ரூ.8 மட்டுமே. மேலும், எல்லா நேரத்திலும் அந்த உணவகத்தில் டீ கிடைக்காததால், வெளியில் சென்று தான் குடிக்கிறோம்,” என்றார்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், “இந்த மருத்துவமனை தொடங்கிய போது, தனியாக உணவகம் அமைக்க டெண்டர் விடுவதற்கு நேரம் இல்லை. எனவே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் உணவகம் அமைக்கப்பட்டது. ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் விலையை நிர்ணயிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் பேசுகிறோம். அது சரிவரவில்லை என்றால், மலிவு விலை உணவகம் தொடங்க, தனி டெண்டர் விடுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x