Published : 12 May 2022 06:00 AM
Last Updated : 12 May 2022 06:00 AM

புவிசார் குறியீடு பெற ஆம்பூரில் 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா நடத்தப்படுகிறது: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர்: ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

இது குறித்து அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத் தூர் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, ஏலகிரி மலை, புதூர்நாடு மலை, ஜவ்வாதுமலை தொடர், ஆண்டியப்பனூர் அணை ஆகியவை சிறப்பு வாய்ந்தது என கூறலாம்.

அதேபோல ஆம்பூர் பிரியாணியும் இம்மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது. இந்திய அளவில் ஆம்பூர் பிரியாணிக்கு தனி மவுசு உண்டு என்றால் அது மிகையாகாது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாணியம்பாடிக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆம்பூர் பிரியாணியை சாப்பிட்டு வியந்தார்.

உடனே, பிரியாணி சமைத்த சமையல் கலைஞரை நேரில் அழைத்து பாராட்டியது மட்டும் அல்லாமல், அவரை புதுடெல்லிக்கு வரவழைத்து அங்கு பிரியாணியை சமைத்து தனது குடும்பபத்தாருடன் சாப்பிட்டு மகிழ்ந்தார். அதைப்போல நாட்டில் பிரபலம் ஆனவர்கள் பலர் ஆம்பூர் பிரியாணியை சுவைத் துள்ளனர்.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்பவர்களும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக செல்லும் பலர் ஆம்பூர் பிரியாணியை சாப்பிட தனியாக நேரம் ஒதுக்கி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆம்பூர் பிரியாணியின் சுவையின் சிறப்பை மேலும் முன்னெடுத்து செல்ல ஆம்பூரில் 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இதற்காக அங்கு 20 முதல் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை குறைந்த விலையில் பிரியாணி கிடைக்கும். அரேபியன் பிரியாணி, மட்டன், சிக்கன், மீன், முட்டை, இறால் உள்ளிட்ட பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஆம்பூர் தம் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் பிரியாணி என 24 வகையான பிரியாணிகள் இங்கு கிடைக்கும்.

சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்க வேண்டும். திருநெல்வேலி அல்வா,  வில்விபுத்தூர் பால்கோவா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு இல்லை என்பதால் அதை பெற இத்திருவிழா நடத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் தக்காளி திருவிழா நடத்தப்படுகிறது. கர்நாடகா மாநிலம் மைசூரில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களில் சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், பொது மக்கள் அதிகமாக கலந்து கொள்வதால் அப்பகுதி சிறப்பு பெறுகிறது. அதேபோல ஆம்பூர் பகுதி சிறப்பு பெற பிரியாணி திருவிழா 3 நாட்களுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x