Published : 11 May 2022 06:44 PM
Last Updated : 11 May 2022 06:44 PM

பேரறிவாளன் வழக்கு; உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி- தீர்ப்பு ஒத்திவைப்பு: வாதங்கள் முழு விவரம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினோம். அதில் ஏதேனும் முடிவு செய்து உள்ளீர்களா?’’ என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைக்க உள்ளதாக கூறினார். அப்போது நீதிபதிகள், ஆளுநர் அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் விடுதலை தொடர்பான அதிகாரம் 72-வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஓரு வழக்கின் விசாரணையை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். எனவே இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால் இந்த வழக்கில் நிவாரணம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனைப்பெற்றவர்களை, தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்கலாம். ஆனால் பேரறிவாளன் விவகாரத்தில் அவ்வாறு இல்லை’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அதிகாரமா ? மாநில அரசுக்கு அதிகாரமா? என்று கூறுவதை விட்டுவிட்டு ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161-ஐ பயன்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘‘தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது. அதற்குப் பின்னர்தான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி தலையிட்டது. இதிலிருந்துதான் குழப்பங்கள் தொடங்கியது’’ என தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நடராஜ், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் 302 பிரிவின்கீழ் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுதலை செய்ய அதிகார இல்லை. மேலும், மத்திய மாநில அரசுகளுக்கும் இது பொதுவான சட்டப் பிரிவாக இருந்தாலும் அதில் முடிவெடுக்கும் என்ற நிலை வரும் பொழுது எந்த விசாரணை அமைப்பு அதில் சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதை பொறுத்துதான் முடிவெடுக்கும் அதிகாரத்தின் தன்மை சம்பந்தப்பட்ட அரசுக்கு வழங்கப்படும்’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘‘இந்திய தண்டனை சட்ட குற்றங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் குடியரசுத் தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா? அப்படியானால், கடந்த 75 ஆண்டுகளில் இத்தகைய நடவடிக்கைகளில் ஆளுநர்கள் வழங்கியுள்ள மன்னிப்பு அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானதா?’’ என கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றனர்.

அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘‘ஒரு மாநில அமைச்சரவை தனது சட்ட அதிகாரப் பிரிவின் கீழ் ஒரு முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும்போது, ஆளுநர் அதன் மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது. ஒரு நபரை விடுவிக்கவும் அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர்’’ என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், தமிழக அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், ஆளுநரே இந்த விவகரத்தில் கையெழுத்திட்டு முடித்திருக்க வேண்டும், ஆனால் அதைவிடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பி, குடியரசு தலைவரையும் இந்த வழக்கினுள் இழுத்து விட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையின் முடிவிற்கு கையொப்பம் இட வேண்டியது ஆளுநரின் வேலை.

ஆனால் அதனை செய்யாமல் ஆவணங்களை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் எனவும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x