பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க சிறப்பு தனி அலுவலரை நியமிக்க வேண்டும்: விஜயகாந்த்

விஜயகாந்த் | கோப்புப் படம்
விஜயகாந்த் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை என்னும் தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் சீரழிவை தடுக்க அரசு தலையிட்டு அறங்காவலர் குழுவின் தேர்தல் நடத்தப்படும் வரையில் சிறப்பு தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் மோசமான நிர்வாகம் காரணமாக தொடர்ந்து சீரழிவை சந்தித்து வருகின்றன. அறக்கட்டளைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பணிக் காலம் கடந்த 2018ம் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சொத்தாட்சியர், அறக்கட்டளை செயலர் ஆகியோர் பொறுப்பில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

10 வாரங்களுக்குள் அறக்கட்டளைக்கு தேர்தல் நடத்தி புதிய அறங்காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால் கெடு முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் அறக்கட்டளைக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் பேரழிவை சந்தித்து வருகின்றன.

மேலும், பேராசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணியிட மாற்றம் செய்ததோடு, அவர்களுக்கான ஊதியமும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. சொத்தாட்சியர், அறக்கட்டளை செயலர் ஆகியோரின் அதிகாரப் போக்கால் ஆசிரியர்களும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் சீரழிவை தடுக்க தமிழக அரசு தலையிட்டு அறங்காவலர் குழுவின் தேர்தல் நடத்தப்படும் வரையில் சிறப்பு தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். மேலும் அறக்கட்டளை தேர்தலை விரைந்து நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in