Published : 11 May 2022 04:41 PM
Last Updated : 11 May 2022 04:41 PM

பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா: 2 ஆண்டுகளுக்கு பிறகு திரண்ட பக்தர்கள்

படங்கள் : வி.எம்.மணிநாதன்

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புஷ்ப ரத ஏரித்திருவிழா: வேலூர் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியில் உள்ள வல்லாண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு மற்றும் பனங்காடு உள்ளிட்ட 4 கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அம்மன், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு மற்றும் தீபாரதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் புஷ்பரதத்தில் வல்லாண்டராமம் வீதி உலா வாணவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான அன்னாசிபாளையம் வீதி உலாவான, புஷ்பரத ஏரித்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடாகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை பனங்காடு அந்தித்தேர் வீதி உலாவும், வெள்ளிக்கிழமை (மே 13) அன்று வேலாங்காடு வீதி உலாவும் நடைபெறவுள்ளது. பின்னர் சனிக்கிழமை (மே 14) காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தோளில் சுமந்து... பொற்கொடியம்மன் புஷ்பரதத்தை பக்தர்கள் தோளில் சுமந்து வருவதுதான் இந்த திருவிழாவின் சிறப்பு. இந்த முறை ஏரியில் சேறு நிறைந்து காணப்பட்டதால், டிராக்டரில் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வழக்கத்தை மாற்றாமல் இந்த ஆண்டும் தோளிலேயே சாமியை சுமந்துவந்தனர்.

மக்கள் கூட்டம்: அன்னாசிபாளையம் ஏரியில் குடிகொண்டுள்ள பொற்கொடியம்மன் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனால் திருவிழா நடந்த பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேர்த்திக்கடன்....இந்த விழாவுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள், தொட்டில் கட்டியும், அலகு குத்தி வந்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவை முன்னிட்டு, அன்னாசிபாளையம் ஏரியில் கடைகள், ராட்டினங்கள் என அமைக்கப்பட்டிருந்தன. இந்த திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு பெரும்பாலான இடங்களில் நீர் மோர், கறி விருந்து உணவுகள் பரிமாறப்பட்டன.

மாட்டு வண்டிக்கட்டிக் கொண்டு... இந்த விழாவை முன்னிட்டு அருகில் உள்ள கிராம மக்கள் பலர் மாட்டு வண்டிக் கட்டிக்கொண்டு, ஏரியில் வந்து இரவே தங்கிவிடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறாதது, மட்டும் மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வண்டிக்கட்டிக் கொண்டு வந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x