Published : 16 May 2016 07:20 AM
Last Updated : 16 May 2016 07:20 AM

பல்லாவரம் தொகுதியில் தபால் வாக்குச் சீட்டு கிடைக்காததால் ஊழியர்கள் திடீர் போராட்டம்: தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீஸார் சொந்த தொகுதியில் இருந்து வேறு தொகுதியில் நியமிக் கப்படுவதால் அவர்கள் ஓட்டுப்போட வசதியாக தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படுகிறது. இதற்கு படிவம்-12-ல் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்களின் வீட்டு முகவரிக்கு தபால் வாக்குச்சீட்டு அனுப்பபடும். இந்த வாக்குச்சீட்டை பூர்த்திசெய்து தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 2,800 பேர் தபால் வாக்குச்சீட்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களில் 300 பேருக்கு மட்டுமே தபால் வாக்குச்சீட்டு அனுப்பப்பட்டு அவர்களும் பூர்த்தி செய்து சம்பந்தப் பட்ட அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடும் எஞ்சிய 2,500 பேருக்கு தபால் வாக்குச்சீட்டுகள் இன்னும் வரவில்லை.

இந்த நிலையில், வாக்குச்சாவடி ஒதுக்கீட்டு ஆணையை பெறுவதற்காக நேற்று பல்லாவரம் புனித அன்னை தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படாததைக் கண்டித்து திடீரென பள்ளி வளாகத்தில் காலை 11 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படாவிட்டால் தேர்தல் பணியை புறக்கணிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து அவர்கள் கோஷமிட்டனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது போலீஸாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், செய்யூர் அரசு பள்ளி ஆசிரியர் ஜேசுராஜ் மயக்கம் அடைந்தார். இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அங்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த பல்லாவரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வ நாதனை அரசு ஊழியர்கள் முற்றுகை யிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்புப் போராட்டம் தீவிரம் அடையவே, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி சவுரிராஜ னுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடியாக சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டம் மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x