பொறியியல் கலந்தாய்வு எப்போது? -அமைச்சர் பொன்முடி பதில்

பொறியியல் கலந்தாய்வு எப்போது? -அமைச்சர் பொன்முடி பதில்
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வு முடிந்து அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர், பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக வரும் மே 17-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொதுவாக நீட் தேர்வு முடிந்த பின்னர் பொறியியல் கலந்தாய்வு வைத்தால்தான் சரியாக இருக்கும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கின்ற பெரும்பாலவனவர்கள் நீட் தேர்வையும் எழுதுகின்றனர். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் வருவதற்கு காரணமே, நீட் தேர்வு முன்னரே பொறியியல் கலந்தாய்வு நடத்தி, தேர்வானவர்கள் பலர் தேர்வெழுதி மருத்துவ படிப்புக்குச் சென்றுவிட்டனர்.

அதனால் இந்தமுறை, நீட் தேர்வு முடிந்து அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர், பொறியியல் கலந்தாய்வை தொடங்கலாம் என்று இருக்கிறோம். அந்த கலந்தாய்வு ஏற்கெனவே நான் சட்டப்பேரவையில் கூறியபடி, எப்படி நடத்தினால், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வசதியாக இருக்கும் என்பது குறித்தெல்லாம் ஆலோசித்து, வரும் 17-ம் தேதி மாலை, அந்த ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், அதிகாரிகள் உள்ளிட்டோர், தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர் பிரதிநிதிகள் எல்லாம் அழைத்து கலந்தாலோசித்து முடிவு செய்யவிருக்கிறோம்.

ஆன்லைன் கலந்தாய்வில் கடந்த காலங்களில் சில முறைகேடுகள் நடந்துள்ளன. அதனையும் தவிர்ப்பதற்கு சென்ற ஆண்டு கூடுமான வரையில் முயற்சிகள் எடுத்தோம். இருந்தாலும், சில மாணவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. இதையெல்லாம் தடுத்துநிறுத்தி, ஆன்லைனில் எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்தும் அந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து அன்றைய தினம் முடிவு செய்வோம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in