9 ஆண்டுகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் குறைவான எண்ணிக்கையில் பணியாளர்கள்

9 ஆண்டுகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் குறைவான எண்ணிக்கையில் பணியாளர்கள்
Updated on
1 min read

சென்னை: 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்களின் எண்ணிக்கை அனுமதி அளிக்கப்பட்ட அளவை விடவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள், 100 க்கு மேற்பட்ட நகராட்சி மற்றும் 400 க்கு மேற்பட்ட பேரூராட்சிகள் உள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான பணியாளர்கள் இல்லை. பல பணியாளர்கள் தற்போது குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறையும் அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2011 முதல் 2019ம் ஆண்டு வரையில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி 2011 ஆம் ஆண்டில் மாநகராட்சிகளில் 1000 பொதுமக்களுக்கு 3.56 முதல் 4.93 என்ற எண்ணிக்கையில் பணியாளர்களும், நகராட்சிகளில் 1.03 முதல் 6.38 என்ற எண்ணிக்கையில் பணியாளர்களும், பேரூராட்சிகளில் 0.69 முதல் 4.14 பணியாளர்கள் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019ம் ஆண்டு மாநகராட்சிகளில் 2.76 முதல் 3.57 பணியாளர்களும், நகராட்சிகளில் 0.86 முதல் 5.84 பணியாளர்களும், பேரூராட்சிகளில் 0.55 முதல் 3.67 பணியாளர்கள் பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 9 ஆண்டுகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போன்று பணியில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 2011ம் ஆண்டில் 2.06 முதல் 2.78 பணியாளர்களும், நகராட்சிகளில் 0.88 முதல் 3.72 பணியாளர்களும், பேரூராட்சிகளில் 0.69 முதல் 3.78 பணியாளர்களும் பணியில் இருந்துள்ளனர். ஆனால் 2019ம் ஆண்டில் மாநகராட்சிகளில் 1.46 முதல் 2.15 பணியாளர்களும், நகராட்சிகளில் 0.62 முதல் 3.43 பணியாளர்களும், பேரூராட்சிகளில் 0.55 முதல் 3.35 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in