

மதுரை: கலைநயமிக்க கட்டிடக்கலையால் பார்ப்போரை கவர்ந்துள்ள திருமலை நாயக்கர் மகாலை சுற்றி வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி குப்பை தொட்டிகளில் நிரம்பி வழியும் குப்பை சுற்றுலாப்பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
தென் தமிழகத்தில் போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் அழிந்ததுபோனதுபோக எஞ்சியுள்ள எழில்மிகு பண்டைய அரண்மனைகளில் ஒன்றாக மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை திகழ்கிறது. இத்தியாலிய கட்டிட பொறியாளரால் வடிவமைப்பில் மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் ரசணைக்கேற்ப உருவான இந்த அரண்மனை கட்டிடக்கலைக்கு இன்றளவும் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த அரண்மனையின் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும், கலைவேலைபாடு மிக்க மேற்கூரையும் பார்போரை பரசவம் கொள்ள வைக்கும். தொல்லியல்துறையால் இந்த அரண்மனை பாராமரிக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் சினிமா ஷூட்டிங்கள், விளம்பர மாடல் ஷூட்டிங்கள் அதிகளவு நடந்தது. படகுழுவினர்கள் அரண்மனையின் சுவர்களில் ஆணிகள் அடித்தும், சுவர்களை சேதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் தற்போது ஷூட்டிங் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தொல்லியல்துறைக்கு கிடைத்த வருவாய் போனாலும் பரவாயில்லை அரண்மனையின் அழகையும், கட்டிடக்கலையும் பாதுகாக்க வேணடும் என்பதே மத்திய, மாநில அரசுகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதுபோல், இந்த அரண்மனையில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை புதிதாக கட்டிடங்கள் கட்டவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தளவுக்கு அரண்மனையின் கட்டிடக்கலைக்கும், அதன் ஸ்தரதன்மைக்கும் முக்கியத்தும் கொடுத்த தொல்லியல்துறை, அதன் எழில் மிகு தோற்றத்தை பாழாக்கும் வகையில் அரண்மனையை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கண்டுகொள்ளாமல் விட்டது தற்போது சுற்றுலாப்பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மதுரையில் அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகாலுக்கு வருகின்றனர். பள்ளி, கல்லூரி குழந்தைகள் கல்வி சுற்றுலா வருகின்றனர். அதனால் மகாலை சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியது தொல்லியல்துறை மற்றும் மாநகராட்சியின் கடமையாக இருக்கிறது.
ஆனால், சமீப காலமாக மகாலை சுற்றி மாநகராட்சி பணியாளர்கள் குப்பை தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். அதில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், மாநகராட்சி பணியாளர்கள் மகாலை சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களை சுற்றி சேகரிக்கும் குப்பைகளை ஒட்டுமொத்தமாக மகால் அருகே கொட்டி குப்பை சேகரிக்கும் மையமாகவும் பயன்படுத்துகின்றனர்.
அதனால், காலை நேரத்தில் மகால் சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. ஒரு காலத்தில் மதுரை வரும் சுற்றுலாப்பயணிகள், வெளியூர் பயணிகள், மகாலை தொலைவில் இருந்து அதன் கட்டிடத்தின் அழகை படம்பிடித்து ரசிப்பார்கள். தற்போது மகாலை தொலைவில் இருந்து படம்பிடித்தால் சுற்றிலும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு அதன் நடுவில் மகால் இருப்பதுபோல் உள்ளது. பகல் பொழுதில் சுற்றியிருக்கும் வணிக வளாக குப்பைகள், குடியிருப்பு குப்பைகள் இந்த பகுதி குப்பை தொட்டிகளில் வந்து கொட்டப்படுகிறது.
அதனால், மகாலுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டிற்கு முன் குப்பை தொட்டிகளே வைக்காமல் வீடு, வீடாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், வணிக வளாகத்திற்கும் நேரடியாக சுகாதாரப் பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து அதை அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
குப்பை தொட்டிகள் இல்லாத நகராக மாற்றுவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது மாநகராட்சி புதிதாக குப்பை தொட்டிகளை வாங்கி சாலைகள், தெருக்களில் மீண்டும் குப்பை தொட்டிகளை வரிசையாக வைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த குப்பை தொட்டிகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் சரியாக குப்பைகளை எடுத்து செல்வதில்லை. அதனால், தற்போது மகாலை சுற்றி யாரும் நடமாட முடியாத அளவிற்கு குப்பை மையமாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.