டாஸ்மாக்கை மாற்றக்கூடாது என கட்டிட உரிமையாளர் கேட்க முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்கை மாற்றக்கூடாது என கட்டிட உரிமையாளர் கேட்க முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என கேட்க கட்டிட உரிமையாளருக்கு உரிமை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஆவுடையார் கோவிலில் எனது கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடை நடத்துவதற்கு எனது கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. மாற்றம் செய்யப்படும் இடத்தின் அருகே பள்ளி அமைந்துள்ளது. எனவே என் கட்டிடத்தில் இருந்து டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், 'டாஸ்மாக் கடை தனது இடத்தில் தான் செயல்பட வேண்டும் என்பதை கட்டிட உரிமையாளர் உரிமையாக கோர முடியாது' என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "குத்தகை காலம் முடியாமல் இருந்தால் மட்டுமே கடையை மாற்றக்கூடாது என கேட்க கட்டிட உரிமையாளருக்கு உரிமை உண்டு. இதை தவிர்த்து கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது எனக் கேட்பதற்கு கட்டிட உரிமையாளருக்கு உரிமை கிடையாது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவில் முரண்பாடு இருந்தால் தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை அரசாணை அடிப்படையில் ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதற்காக மனுதாரருக்கு 2 வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த மனுவை கலால்துறை ஆணையர் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in