Published : 11 May 2022 04:33 AM
Last Updated : 11 May 2022 04:33 AM
சென்னை: சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு மலரை, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெற்றுக் கொண்டார்.
சென்னை மாகாணமாக இருந்தபோது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, கடந்த 1921-ம் ஆண்டு ஜன.12-ம் தேதி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்கவும், தமிழகத்தின் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தவருமான கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கும்படி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.
அதையேற்று, கடந்த ஆண்டு ஆக.2-ம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்றதுடன், பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை அரங்கில் நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப்பட திறப்பு விழா தொடர்பான மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பிரதியை பேரவைத்தலைவர் மு.அப்பாவு பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு கொறடா கோவி செழியன், கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச்செல்வன் (விசிக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்தியகம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மநேமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோருக்கும் விழா மலரை முதல்வர் வழங்கினார்.
அதிமுக - பாஜக புறக்கணிப்பு
இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சித்தலைவர், துணைத்தலைவருக்கான இருக்கையில் கு.செல்வப்பெருந்தகை மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர். திமுக உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT