Published : 11 May 2022 07:51 AM
Last Updated : 11 May 2022 07:51 AM
ஈரோடு: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில், கொடுமுடியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 10 நாள் நடைபயணம் நேற்று தொடங்கியது. நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்துக்கான நிதியைக் கேட்பவர்களை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரிவினைவாதிகள் என்று கூறுகிறார். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. தமிழக பாஜகவில் வாய்ச்சொல் வீரர்கள்தான் உள்ளனர்.
7 பேர் மட்டுமே தமிழர்களா?
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலையில், காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது. அரசியல் கட்சியினர், குழுக்கள் இந்த 7 பேரை மட்டுமே தமிழர்கள் என்று நினைக்கிறார்களா? கடந்த 25 ஆண்டுகளாக 22 ஆயிரம் தமிழர்கள் சிறையில் உள்ளனர். அவர்களும் தமிழர்கள்தானே.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அவர்களை விடுதலைசெய்வதில் காங்கிரஸுக்கு ஆட்சேபம் இல்லை. தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியை, காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT